கொடுவிலார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஒன்பது வார்டுகளில் சுமார் மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்களுக்கு முல்லைப் பெரியாற்றிலிருந்தும், ஆழ்துளை கிணறுகள் மூலமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
கொடுவிலார்பட்டி ஒன்றாவது வார்டுக்குட்பட்ட பகுதியில் பல நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. இதனால் காலிக் குடங்களுடன் பெண்கள் இன்று (பிப்.16) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பெண்கள் கூறியதாவது, "எங்கள் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்து தர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. கோடை காலத்தில் ஆழ்துளை கிணறுகள் வற்றிக் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்" என்றனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த பழனிசெட்டிபட்டி காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக பெண்களிடம் உறுதியளித்தனர். அதன்பேரில் போராட்டத்தை பெண்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் சாலை மறியல்!