தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி அருகே உள்ள திருச்செந்தூர் பகுதியை சேர்ந்தவர் முத்துலட்சுமி (37). இவரது கணவர் கருப்பையா (45) கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். அதே பகுதியில் தங்களுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர்.
தங்களது வீட்டில் முதல் தளம் கட்டுவதற்காக ரூபாய் 5 லட்சம் வீட்டுக்கடனை கடந்த 2011 ஆம் ஆண்டு தேனியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட (யூகோ) வங்கியில் பெற்றுள்ளார். 15 வருட தவணையில் பெற்ற கடனுக்கு இதுவரை 7 லட்சம் வரை வங்கியில் செலுத்தியுள்ள நிலையில் தனது வீட்டை வங்கி நிர்வாகம் எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி ஏலம் விட்டதாக கூறிய முத்துலட்சுமி, வங்கியின் முன்பு மண்ணெண்ணெய் கேனுடன் தர்ணாவில் ஈடுபட்டார். மேலும் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை செய்து கொள்வதாக எச்சரித்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் முத்துலட்சுமியை தேனி நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.