தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (45). இவரது மனைவி மணிமேகலை (35) இவர்களுக்கு விஜயமூர்த்தி (12), காமேஷ்வரன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் உசிலம்பட்டி கிளையில் நடத்துநராகப் பணிபுரிந்துவந்த ராஜேஷ் கண்ணன் கோட்டூரில் சொந்தமாக தோட்டம் வைத்து விவசாயமும் பார்த்துவந்தார்.
இந்நிலையில் திங்கள்கிழமை (பிப். 8) மாலை பணி முடிந்து வீடு திரும்பிய ராஜேஷ் கண்ணன் தன்னுடைய தோட்டத்தில் அறுவடைசெய்து விற்பனைசெய்யப்பட்ட காய்கறிகளின் பணத்தைப் பெற்றுக்கொண்டு இரவு வீட்டிற்கு வராமல் தனது பண்ணை வீட்டில் தூங்கியுள்ளார்.
மறுநாள் காலை பண்ணை வீட்டில் பால் கறப்பதற்காகச் சென்ற பால்காரர் ராஜேஷ் கண்ணன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இது குறித்து வீரபாண்டி காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார்.
இந்தத் தகவலையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர், ராஜேஷ் கண்ணனின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், ராஜேஷ் கண்ணனின் தலையில் கல்லை போட்டு கொலைசெய்தது தெரியவந்தது. தொடர்ந்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.