தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகேவுள்ள இடையன்குளத்தில் 2020 ஜூன் 14ஆம் தேதி, எரிந்த நிலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கண்டறியப்பட்டது. முகம் சிதைந்து உடல் முழுவதும் எரிந்து கைப்பற்றப்பட்ட சடலத்தை அடையாளம் காண்பதில் காவல் துறையினருக்குச் சிரமம் நிலவியது.
இதனால் இறந்தவரின் உடல் டி.என்.ஏ. பரிசோதனைக்குள்படுத்தப்பட்டது. இதனை கொலை வழக்காகப் பதிவுசெய்து, குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு மூன்று தனிப்படைகள் அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி உத்தரவிட்டார்.
மேலும் உத்தமபாளையம் காவல் உள்கோட்டத்தில் காணாமல்போனவர்கள் குறித்து பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாகவும் காவல் துறையினர் விசாரணை நடத்திவந்தனர். இதனிடையே இறந்தவரின் டி.என்.ஏ. பரிசோதனை முடிவு வெளியானதையடுத்து, புலன் விசாரணையைத் தீவிரப்படுத்திய காவல் துறையினர், இறந்தவர் கூடலூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (42) என்பது உறுதிசெய்யப்பட்டது.
இது தொடர்பாக அவரது மனைவி முத்துமாரியிடம் (33) நடத்திய முதற்கட்ட விசாரணையில், தனது கணவர் தற்போது கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற பகுதிகளில் தங்கி வேலை செய்துவருவதாகவும், கடைசியாக தனது மூத்த மகள் திருமணத்திற்காக கடந்த ஜூன் மாதம் வந்துசென்றதாகவும், அதன்பின் அவரைக் காணவில்லை எனப் புகார் அளிக்கவில்லை என எந்தவொரு பதற்றமும் இல்லாமல் கூறியுள்ளார்.
இதன் காரணமாக சந்தேகமடைந்த தனிப்படையினர், அவரது செல்போன் எண்ணிற்கு வரும் அழைப்புகளைக் கண்காணித்துவந்தனர். இதில் தனது கணவரின் கொலை சம்பந்தமாக காவல் துறையினர் நடத்திய விசாரணை குறித்து செல்வராஜ் என்பவரிடம் முத்துமாரி பேசியிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட இரண்டாம்கட்ட விசரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.