தேனி மாவட்டம் கம்பம் புதுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரசாத் (25). இவருக்கும் கேரள மாநிலம் கோட்டயம் காரப்புழா பகுதியைச் சேர்ந்த காயத்ரி (19) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
கேரள மாநிலம் வண்டிப்பெரியாறு வாளார்டி எஸ்டேட் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில், மே 24ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் திருமணத்திற்காகக் கேரளா செல்ல மணமகனும், அவரது வீட்டாரும் இ-பாஸ் வேண்டி பதிவுசெய்தனர்.
ஆனால் நேற்று காலைவரை கேரளா செல்ல இவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. முகூர்த்த நேரத்திற்குள் செல்ல வேண்டும் என்பதற்காக மாப்பிள்ளை வீட்டார் ஒரு சிலர் மட்டும் முன்னதாகப் புறப்பட்டு தமிழ்நாடு-கேரள எல்லைப்பகுதியான குமுளிக்குச் சென்றுள்ளனர்.
ஆனால் அங்கு தொடர்ந்து காத்திருந்தும் அவர்களுக்கு இ-பாஸ் கிடைக்காமல் போனதால் மணமகன் குடும்பத்தை கேரளாவுக்குள் செல்ல அலுவலர்கள் அனுமதிக்கவில்லை.
அதே நேரம் பெண்வீட்டார் மாப்பிள்ளையின் வருகைக்காக கேரளாவில் உள்ள வண்டிப்பெரியாறில் காத்திருந்த நிலையில், மாப்பிள்ளைக்கு இ-பாஸ் கிடைக்காத தகவல் அவர்களுக்குத் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பெண் வீட்டார் புறப்பட்டு குமுளி வந்தடைந்தனர்.
தொடர்ந்து குமுளி காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் அறிவுரையின்படி, இரு மாநில எல்லையில் வைத்து திருமணம் நடத்த முடிவுசெய்தனர். வருவாய், காவல் துறை அலுவலர்கள் வாழ்த்த எளிமையாக வெகு சில குடும்பத்தினர் மட்டுமே சூழ மணமகன் பிரசாத்தும் மணமகள் காயத்ரியும் திருமணம் செய்துகொண்டனர்.
மேலும், திருமணத்திற்குப் பிறகும் கேரளா செல்ல மணமகனுக்கும், தமிழ்நாடு வர மணப்பெண்ணுக்கும், அனுமதி கிடைக்காததால் இருவரும் திருமணம் முடித்து மீண்டும் அவரவர் வீடுகளுக்கே திரும்பினர்.
இ - பாஸ் கிடைக்காததால் தமிழ்நாடு - கேரளா எல்லையில் திருமணம் கரோனா ஊரடங்கின் மத்தியில் இ-பாஸ் கிடைக்காததால் மாநில எல்லையில் நடைபெற்ற இத்திருமணமும், திருமணம் முடித்து மணமக்கள் இருவரும் அவரவர் வீடுகளுக்குத் திரும்பியதும் அப்பகுதியினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க :'திருமணத்தை நடத்தி வைத்த அரசு அலுவலர்கள்... ஃபேஸ்புக் நேரலையில் குடும்பத்தினர்'