தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள தி.அணைக்கரைப்பட்டி கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. இந்த கிராமத்திற்கு வைகை - சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த கிராமத்திற்கு வரும் குடிநீரை சிலர் திருட்டுத்தனமாக குழாய் அமைத்து விவசாயத்திற்கு பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஒரு மாதமாக தி.அணைக்கரைப்பட்டி கிராமத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை இதனால் கிராமத்திற்கு கிட்டதட்ட ஒருமாத காலமாக சரிவர குடிநீர் வரவில்லை. இது குறித்து சம்பந்தபட்ட அலுவலர்களிடம் பலமுறை புகார் அளித்தும், அவர்கள் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் இன்று ஆண்டிபட்டி - வத்தலக்குண்டு சாலையில் இதனால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் இன்று ஆண்டிபட்டி - வத்தலக்குண்டு சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்த ஆண்டிபட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மேலும் ஓரிரு நாட்களில் தி.அணைக்கரைப்பட்டி கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட போவதாக கிராமமக்கள் எச்சரித்துள்ளனர். பொதுமக்களின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் ஆண்டிப்பட்டி - வத்தலக்குண்டு சாலையில் சுமார் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.