தேனி:தேனி மாவட்டம்ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து தென் மாவட்டங்களில் பாசனத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த நிலையில், திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் 58 கிராம கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 150 கன அடி தண்ணீரை, இன்று (டிச.23) ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்.
வைகை அணையில் இருந்து கால்வாய் மூலம் செல்லும் இத்தண்ணீரின் மூலம், திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை பகுதியில் உள்ள இரண்டு கண்மாய்கள் மற்றும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த 31 கண்மாய்கள் என மொத்தம் 33 கண்மாய்களின் 58 கிராமங்களைச் சேர்ந்த 2,284.86 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவித்து உள்ளனர்.
மேலும், வைகை அணையின் நீர்வரத்து மற்றும் நீர் இருப்பைப் பொறுத்து, 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்கும் நாட்கள் முடிவு செய்யப்பட்டு, தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீரை, விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தி, குறுகிய காலப்பயிர்களை நடவு செய்து அதிக மகசூல் பெற வேண்டும் என பொதுப்பணித் துறையினர் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்