தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆண்டிபட்டி அருகே விலைக்கு தண்ணீர் வாங்கி சாகுபடி செய்யும் அவலம்! - papaya tree

தேனி: ஆண்டிபட்டி அருகே காய்ந்து வரும் பப்பாளி செடிகளை காப்பாற்ற தண்ணீரை விலைக்கு வாங்கி விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

தண்ணீரை பாய்ச்சும் விவசாயி

By

Published : Apr 1, 2019, 10:19 PM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சேடபட்டி, அணைக்கரைப்பட்டி, ராஜகோபாலன்பட்டி,வெள்ளையத்தேவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் முருங்கை, பப்பாளி சாகுபடி இறவை பாசனம் மூலம் அதிகளவில் நடைபெறுகிறது. இந்நிலையில் தற்போது கோடை காலம் துவங்கியதால் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறையத்தொடங்கியது. இதனால் சாகுபடி நிலங்களுக்கு தேவையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கருகி வரும் பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி வருகின்றனர்.

விவசாயி

இது குறித்து,சேடபட்டி பகுதியை சேர்ந்த விவசாயி கூறுகையில், "மூன்று ஏக்கர் நிலத்தில் பப்பாளி, முருங்கை சாகுபடி செய்துள்ளோம். விதை, களை எடுத்தல், மருந்தடித்தல்என ஒன்றரை ஏக்கர் பப்பாளிக்கு 1.5 லட்சம் வரை செலவு செய்துள்ளோம். தற்போது காய் காய்த்துள்ள நிலையில் அறுவடைக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. ஆனால் கிணறுகளில் தண்ணீர் வற்றியதால், மரங்கள் காய்ந்து வருகின்றன. கருகிய மரங்களை காப்பாற்ற தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி வருகிறோம். 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு டிராக்டர் தண்ணீர் விலை 600 ரூபாய்.

வாரத்திற்கு இரண்டு முறை வாங்குகின்ற தண்ணீரை கிணற்றில் நிரப்பி செடிகளுக்கு சொட்டு நீர் பாசன முறையில் பாய்ச்சி வருகின்றோம். ஏற்கெனவே, உழவுப்பணிக்கு செலவு செய்துள்ள நிலையில், தற்போது தண்ணீருக்கும் கூடுதல் செலவு செய்வதால் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் 1.5 ஏக்கர் நிலத்தில் முருங்கை சாகுபடிக்கு 45ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். ஆனால் போதிய விலையில்லாததால் காய்கள் பறிக்கப்படாமலே உள்ளது" எனத்தெரிவித்தார்

மேலும் கூடுதல் செலவால் ஏற்படும் நஷ்டத்திற்கு அரசு உதவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details