தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து அனைத்து இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வந்தது.
இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரித்து அணைகள் வேகமாக நிரம்பத் தொடங்கின. இதன் தொடர்ச்சியாக தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயரத் தொடங்கி, அதன் முழுக் கொள்ளளவான 57 அடியில் 55 அடியை எட்டியது.
அதனால், அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதைத்தொடர்ந்து இன்று மஞ்சளாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி தேனி, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 5 ஆயிரத்து 259 ஏக்கர் நிலங்கள் முதல் போக பாசன வசதி அடையும் வகையில் மஞ்சளாறு அணையில் இருந்து விநாடிக்கு 100 கனஅடி நீரை மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் இன்று திறந்து வைத்தார்.
முன்னதாக அணையின் பழைய, புதிய ஆயக்கட்டு பகுதிக்குச் செல்லக்கூடிய மதகுப்பகுதிகளுக்கு பூஜை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் மதகுப்பகுதியில் வெளியேறிய தண்ணீரை மாவட்ட ஆட்சியர் மலர்த் தூவி வரவேற்றார்.
இதனால் தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி பகுதியும், திண்டுக்கல் மாவட்டத்தில் கணவாய்ப்பட்டி, வத்தலக்குண்டு, சிவஞானபுரம், கன்னுவராயன்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 3 ஆயிரத்து 386 ஏக்கர் பழைய ஆயக்கட்டுப் பகுதிக்கும், ஆயிரத்து 873 ஏக்கர் புதிய ஆயக்கட்டுப் பகுதிக்கும் ஆக மொத்தம் 5 ஆயிரத்து 259 ஏக்கர் நிலங்கள் முதல் போக சாகுபடியில் நீரினைப் பெறும்.
அணையின் நீர் இருப்பை பொறுத்து, இன்று முதல் 135 நாட்களுக்கு திறக்கப்படும் தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாகப் பயன்படுத்தி குறுகிய காலப் பயிர்களை சாகுபடி செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
மஞ்சளாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 435.32 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து 282 கன அடியாகவும் உள்ளது.
இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை , வருவாய்த்துறை உள்ளிட்ட அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:பவானிசாகர் அணையிலிருந்து உபரிநீர் திறப்பு!