கேரள மாநிலம் தேக்கடியில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாகத் திகழும் இந்த அணையில் 142 அடி வரை நீர் தேக்கிக் கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பெய்த பருவமழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 130 அடி வரை உயரத் தொடங்கியது. இதனால் அணையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் மற்றும் பாசன வசதிக்காகத் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான ஆனவச்சால், சப்பாத்து, வண்டிப்பெரியாறு உள்ளிட்ட இடங்களில் மழை அளவு குறைந்து தற்போது முற்றிலும் இல்லாததால், கடந்த சில வாரங்களாகவே அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 100 கன அடியை தாண்டாத நிலை ஏற்பட்டது.
மேலும் தமிழ்நாடு குடிநீர் மற்றும் பாசனத்திற்காகத் தொடர்ந்து கணிசமான அளவு திறக்கப்பட்டு வந்ததால், அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகின்றது. நீர்வரத்து குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் தினசரி சிறு, சிறு புள்ளிகளாகக் குறைந்து, தற்போது 120 அடிக்குக் கீழ் சரிந்துள்ளது.