நீண்ட நாள்களுக்குப் பிறகு திரண்டு வரும் நீர்வரத்து தேனி: போடிநாயக்கனூர் பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி அணையானது பிள்ளையார் நீர்வீழ்ச்சி என கூறப்படுகிறது. இது அப்பகுதியில் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும் விளங்கி வருகிறது. மேலும் போடியின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழை வெள்ளத்தை ஊருக்குள் வரவிடாமல் தடுப்பதற்காகவும், போடியை சுற்றியுள்ள கண்மாய்களின் முக்கிய நீர் பிடிப்பின் ஆதாரமாகவும் உருவாக்கப்பட்டது இந்த அணை பிள்ளையார் நீர்வீழ்ச்சி.
பழமை வாய்ந்த இந்த நீர்வீழ்ச்சி போடிநாயக்கனூரில் திற்பரப்பு என்று அழைக்கப்பட்டு வருகிறது. தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில், கடந்த ஓரிரு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதைத் தொடர்ந்து நேற்று இரவு (செப்.20) குரங்கணி, கொம்பு தூக்கி, கொட்டகுடி, பிச்சங்கரை பகுதிகளில் பெய்த பரவலான மழை காரணமாக கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் போடி அணைப் பிள்ளையார் நீர்வீழ்ச்சியிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த ஓரிரு மாதங்களாகவே மழையின்மை காரணமாக முற்றிலும் வறண்டு நிலையில் கிடந்த இந்த நீர்வீழ்ச்சியில், தற்போது நீர்வரத்து காரணமாக போடிநாயக்கனூரில் சுற்றியுள்ள கண்மாய்களில் நீர்வரத்து வர தொடங்கியுள்ளது.
தற்போது அணை பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து வரத் தொடங்கியதால், கண்மாய்களுக்கும், குளங்களுக்கும் நீர்வரத்து அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் போடி மற்றும் அதனைச் சுற்றிப் பகுதிகளில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து பரவலாக மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: Today Gold Rate: மக்களே ரெடியா!... நீண்ட நாட்களுக்கு பிறகு குறைந்த தங்கத்தின் விலை! எவ்வளவு தெரியுமா?