தேனி:வடபுதுபட்டியைச் சேர்ந்தவர் திமுக தேனி நகரப் பொறுப்பாளர் சூர்யா பாலமுருகன். இவர் அரசுப் பணியிட மாறுதல் பெற வேண்டும் என்றால், அமைச்சர் அலுவலகத்திற்கு 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும்,
அதற்கு முன்பணமாக 3 லட்ச ரூபாயும், இரண்டு லட்சத்தை காசோலையாக வழங்க வேண்டும் எனவும், பணியிட மாறுதலுக்கான ஆணை கிடைத்ததும், காசோலையை வங்கியில் செலுத்தி பணமாக மாற்றிக்கொள்வதாகவும் ஒருவரிடம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
லஞ்ச பேரம் பேசும் வைரல் வீடியோ:
மேலும் அந்த வீடியோவில், ”அரசுப் பணியிட மாறுதல் பெறுவதற்கு இதைவிட வேறு எவரும் குறைவாகப் பணம் வாங்குவதில்லை. இது போன்று பத்து நபர்களின் பணியிட மாறுதலுக்காக அமைச்சா் அலுவலகத்திற்கு 30 லட்சம் ரூபாயை முதலில் செலுத்த வேண்டும். நம்பிக்கையுடன் வந்தால் மட்டுமே இந்த வேலைகளை செய்து தர முடியும்” எனப் பேரம் பேசுகிறார்.
இதனிடையே தன்னிடம் பணம் பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மூவேந்தர் முன்னேற்றக் கழக கட்சியைச் சேர்ந்த ஜெயகாளை என்பவர் மீது, திமுக தேனி நகரப் பொறுப்பாளர் சூர்யா பாலமுருகன், மாவட்ட காவல் கண்காணிப்பாரிடம் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், ”ஜெயகாளை என்பவர், ஒரு வீடியோ எடுத்து அதில் நான் பேசும் குரல்களை டப்பிங், எடிட்டிங் செய்து என்னை மிரட்டி 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிக் கொண்டிருக்கிறார் . இந்தப் பொய்யான வீடியோவை சோசியல் மீடியாக்களில் போட்டுள்ளார்.
அதேபோல் ஒரு பெண் குரல் போல் பேசி, வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி, நான் அந்தப் பெண்ணிடம் பணத்தை பெற்றுக் கொண்டதாக ஒரு ஆடியோ ரெக்கார்டிங் தயார் செய்துள்ளார். அந்த ஆடியோவை என் வாட்ஸ்-அப் நம்பருக்கு போட்டு, என்னிடம் 3 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுகிறார்.
அதேபோல் நான் கேட்கும் பணத்தை கொடுக்கவில்லை என்றால், நீங்கள் தேனி நகர் மன்றத் தலைவருக்கு போட்டியிடுகிறீர்கள்.
இந்த வீடியோ, ஆடியோக்களை போட்டு உங்கள் பெயரை அசிங்கப்படுத்திவேன் என்று என்னை பயமுறுத்துகிறார் . எனவே, என் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும், இவரைப் போன்ற நபர்கள் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
சூர்யா பாலமுருகன் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி வடபுதுபட்டி ஊராட்சிமன்றத் தலைவராக உள்ளார்.
தேனி நகராட்சித் தலைவராக வேண்டும் என்ற இலக்குடன் சூர்யா பாலமுருகன் இயங்கி வந்தார். தேனி மாவட்டத்தில் இரண்டு இடங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
அதில் வடபுதுபட்டியும் ஒன்று. அப்போதே மு.க.ஸ்டாலினிடம் மனதில் இடம் பெற வேண்டும் எனப் பெரும் செலவு செய்து தனது அரசியல் பலத்தைக் காட்டியவர்.
இந்நிலையில், இவர் பணியிடமாறுதல் பணம் கேட்பதாக வெளியாகியுள்ள வீடியோ தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக நிர்வாகி மீது பல்வேறு குற்றச்சாட்டு:
இதுகுறித்து ஜெயகாளையிடம் பேசியபோது அவர், ”நான் தேனி மாவட்ட மூவேந்தர் முன்னேற்றக் கழகச் செயலாளராக உள்ளேன். மூவேந்தர் புயல் மீடியா நடத்தி வருகிறேன். சூர்யா பாலமுருகன் பேசிய வீடியோ பதிவு உண்மையானது. பாதிக்கப்பட்ட நபர் வீடியோ பதிவு செய்து என்னிடம் ஒப்படைத்தார்.
நான் என்னுடைய யூ-ட்யூப் சேனலில் அதை வெளியிட்டேன். வேறு மீடியாக்களிடமும் அவர் கொடுத்துள்ளார்.
அந்த ஆசிரியை அரசு நடத்திய கலந்தாய்வில் கலந்துகொண்டு யாருக்கும் பணம் கொடுக்காமல் பணிமாறுதல் பெற்று வந்துவிட்டார். ஆசிரியர் பணியிடமாறுதலுக்கு திருவண்ணாமலையில் இருந்து தேனிக்கு கேட்டனர்.