தேனி:தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுள் ஒருவர் விஜய். சமீபகாலமாக விஜயின், மேடைப்பேச்சுகள், செயல்பாடுகள் போன்றவை மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்நிலையில் நாளை (ஜூன் 22) நடிகர் விஜய் தனது 49வது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார்.
அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக விஜய் ரசிகர் மன்றம் மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். அதில் நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் எனத் தளபதி விஜய் மக்கள் இயக்கம் மற்றும் அவரது ரசிகர்களின் விருப்பம் அதில் குறிப்பிடம் வாசகங்கள் மூலம் தெரிய வருகிறது.
மேலும் அவர்களின் விருப்பத்தை நடிகர் விஜய்க்கு தெரிவிக்கும் விதமாகத் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என விஜய் ரசிகர் மன்றத்தினர் சார்பாக போஸ்டர்கள் ஒட்டும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு, சென்னை அடுத்த நீலாங்கரையில் 10 மற்றும் 12 ஆம் பொதுத்தேர்வில் சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் 12 மணி நேரத்திற்கு மேலாகப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். விஜய் அரசியலுக்கு வர உள்ளதால் தான் இது போன்ற நிகழ்ச்சிகள் அவர் நடத்துவதாக அரசியல் விமர்சகர்கள் சார்பில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.