தேனி டாஸ்மாக் குடோனில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை தேனி:தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கருவேல் நாயக்கன்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கிடங்கில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீரென சோதனை நடத்தினர்.
அதாவது தீபாவளியை முன்னிட்டு மதுபான கிடங்குகளில் உயர் அதிகாரிகளுக்கு அதன் கீழ் செயல்படும் அதிகாரிகள் மற்றும் டாஸ்மாக் மதுபான பார்களின் உரிமையாளர்கள் லஞ்சம் கொடுக்கப்படுவதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அந்த ரகசியத் தகவலின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சுந்தராஜன் தலைமையில் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் மதுபானக் கிடங்கில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் அந்த சோதனையில் மதுபான கிடங்கு நுழைவாயிலில் கதவுகளை இழுத்துப் பூட்டுப் போடப்பட்டு, பணியாளர்கள் எங்கும் வெளியே செல்லாதவாறு சோதனை நடைபெற்றது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் நிலையில், மறுபுறம் டாஸ்மாக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படும் மதுபானங்கள் வாகனத்தில் எடுத்துச் செல்லும் பணி நடைபெற்றது.
பின்னர் மதுபான கிடங்கு மேலாளர் மற்றும் பத்திற்கும் மேற்பட்ட அலுவலர்களிடம் விசாரணை நடத்தி, சோதனை செய்ததில் கணக்கில் காட்டாத சுமார் 27 ஆயிரத்து 410 ரூபாய் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குத் தொடங்கிய சோதனையானது சுமார் 6 மணி நேரமாக நடைபெற்றது.
இதையும் படிங்க: ரோடு போட்ட ஒரே மாதத்தில் பெயர்த்தெடுக்கும் மாநகராட்சி நிர்வாகம்.. மக்கள் பணத்தை வீணடிப்பதாகப் பொதுமக்கள் குற்றச்சாட்டு!