தேனி மாவட்டம் கம்பம், உத்தமபுரம் ஆகிய பகுதிகளில் போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு அதிகளவில் விற்கப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தடுக்கும் நோக்கில், மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளர் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டார். சிறப்பு பயிற்சி பெற்ற 'வெற்றி' என்ற மோப்ப நாயை போதைப் பொருள் சோதனையில் ஈடுபடுத்தினர்.
இந்த மோப்ப நாய் பைகள் மற்றும் வாகனங்களில் மறைத்து வைத்துக் கொண்டு செல்லும் கஞ்சா கடத்தலை, வாசனையை வைத்து நுகர்ந்து பார்த்து கண்டுபிடிக்க இந்த நாய்க்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் விற்பவா்களை பிடிக்க உதவிய மோப்ப நாய் இந்நிலையில், உத்தமபாளையம் துணை கண்காணிப்பாளர் சின்னக்கண்ணு தலைமையில், மோப்பநாய் வெற்றியின் உதவியுடன் கம்பம் வடக்குப்பகுதியில் உள்ள கோம்பைரோடு, நாககன்னியம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த மூன்று பேரை மோப்ப நாய் கண்டுபிடித்தது. அவர்களைச் சோதித்ததில் மூன்று கிலோ போதைப் பொருட்களை கையில் வைத்திருந்தனர். இதையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கம்பம் பகுதியைச் சேர்ந்த வீரமணி (27), குருசாமி (44), சிவமணி (41) என்பது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து போதைப் பொருட்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தடுப்பணை கட்டவில்லை என்றால் தேர்தலை புறக்கணிப்போம் - விவசாயிகள்