மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் தேனி மாவட்டத்தில் இதுவரை 25 அம்மா மினி கிளினிக்குகள், 4 நடமாடும் அம்மா மினி கிளினிக்குகள் திறந்துவைக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக இன்று பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு 3 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகளைத் திறந்துவைத்தார்.
முதலாவதாக பெரியகுளம் அருகே உள்ள ஜி. கல்லுப்பட்டி, குள்ளப்புரம், சருத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் திறந்துவைத்து கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு கால ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். குள்ளப்புரம் பகுதியில் 9.08 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம், வடபுதுப்பட்டி- அம்மாபட்டியில் 31.50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்துவமனைக் கட்டடங்கள் என 40.58 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய கட்டடங்களைத் திறந்துவைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.