தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகேவுள்ள மாவட்ட எல்லையான காட்ரோடு சோதனைச்சாவடியில் காவல் துறையினர் வழக்கம்போல் இன்று பணியில் இருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த வாகனத்தை சோதனை செய்ததில் ஏராளமான வெடிமருந்துகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஊத்துக்குளியில் பாறைகளை வெடிவைத்து தகர்க்கும் வெடிபொருள் விற்பனை மையத்திலிருந்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியிலுள்ள ஆறு குவாரிகளுக்கு எடுத்துச் செல்லப்படுவதாக வாகனத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
இதில் 25 கிலோ எடையுள்ள வெடிமருந்துப் பெட்டிகள், 15 ஆயிரத்து 850 டெட்டனேட்டர்கள், வெடிக்கப் பயன்படும் ஈடி (வெடிமருந்து) 300 பாக்கெட்டுகள் ஆகியவை இருந்தன.
எடுத்துவரப்பட்ட வெடி மருந்துகளுக்கும், அதன் விற்பனை ரசீதுகளுக்கும் வித்தியாசம் இருந்ததால் வாகனத்தைக் கைப்பற்றிய காவல் துறையினர் ஓட்டுநர், அவருடன் வந்த இருவரையும் தேவதானப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து க்யூ பிரிவு காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், "வெடிமருந்து, டெட்டனேட்டர்களைத் தனித்தனியாக எடுத்துவர வேண்டும் என்பது உத்தரவு.
இவ்வாறு வெடிபொருள்கள் அனைத்தும் மொத்தமாக ஒரே வாகனத்தில் எடுத்து வரும்போது ஒன்றுக்கொன்று உராய்வு ஏற்பட்டு பெரும் விபத்து உண்டாகும் ஆபத்துள்ளது" எனத் தெரிவித்தனர்.
மேலும் கைப்பற்றப்பட்ட வெடிபொருள்கள் பாறைகளைத் தகர்ப்பதற்காக எடுத்துவரப்பட்டதா அல்லது வேறு ஏதும் சதித்திட்டம் தீட்டுவதற்காக கொண்டுவரப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்றுவருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.