ஆண்டுதோறும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் தங்கள் மனம் கவர்ந்த நபரிடம் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் ஒரு நாளே காதலர் தினம். இந்திய சமூகத்தில் ஊடுருவி இருக்கும் சாதிய கட்டமைப்பை சிதைப்பதற்கு காதலின் பங்கு அளப்பறியது என்பதே பகுத்தறிவுவாதிகளின் கருத்து.
உலகளவில் காதலர் தினம் ஆண்டுக்கு ஆண்டு வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டுவந்தாலும், இந்தியாவிலுள்ள சில அமைப்புகள் மட்டும் காதலர் தினத்திற்கு எதிராக போராடுவது வழக்கம். ஏன் என்று காரணம் கேட்டால், 'சாதி என்பது மிக முக்கியமானது. எங்கேயாவது நாயும் கழுதையும் திருமணம் செய்யுமா?' என்று விசித்திர லாஜிக்கையும் கூறுவார்கள்.
நாயும் கழுதையும் ஒரே இனம் இல்லை, ஆனால் காதலித்து திருமணம் செய்யும் மனிதர்கள் ஒரே இனம்தான் என்ற அடிப்படை அறிவு இல்லாத இவர்களை நினைத்து சிரிப்பதா, அழுவதா என்று பகுத்தறிவுவாதிகள் வாதத்தை முன்வைக்கின்றனர். இதேபோல காதலர் தினத்தன்று வெளியே செல்லும் ஜோடிகளை அத்துமீறி மிரட்டி திருமணம் செய்து வைக்கும் அராஜக சம்பவங்களை ஆண்டுதோறும் இவர்கள் நடத்துவது வழக்கம்.
இந்நிலையில், தேனியில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று ரோட்டில் தன் வேலையை பார்த்துக்கொண்டு அமைதியாக சென்றுகொண்டிருந்த கழுதையையும், அங்கிருந்த நாய் ஒன்றையும் பிடித்து இந்து எழுச்சி முன்னணியினர் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்த நிகழ்வு சலசலப்பை ஏற்படுத்தியது.