தேனி:ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து, பெரியாறு பிரதான கால்வாயின் வழியாக ஒரு போக பாசன பகுதிகளின் குடிநீருக்காகவும், திருமங்கலம் பிரதான கால்வாய் வழியாக ஒரு போக பாசன பகுதிகளின் குடிநீருக்காகவும் என 1,130 கன அடி தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று முதல் 10 நாட்களுக்கு குடிநீருக்காக வைகை அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பெரியாறு பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசனப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பயன் பெறும் வகையில், கடந்த 10ஆம் தேதி வைகை அணையில் இருந்து சுமார் 900 கன அடி நீரை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி மற்றும் மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்நிலையில், பெரியாறு பிரதான கால்வாயில் ஒரு போக பாசனப் பகுதிகளின் குடிநீர் தேவைக்காகவும், திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசன பகுதிகளுக்கு குடிநீருக்காகவும், சுமார் 230 கன அடி வீதம் என மொத்தம் 1,130 கன அடி நீர் வைகை அணையிலிருந்து இன்று முதல் 10 நாட்களுக்கு திறக்கப்படவுள்ளது. இந்த தண்ணீர் சிறிய மதகுகள் மற்றும் நீர்மின் நிலையம் வழியாக வெளியேற்றப்படுகிறது.
மேலும், திறக்கப்படும் தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமென பொதுப்பணித் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஏனெனில், முன்னர் 71 அடி உயரம் உள்ள வைகை அணை நீர்மட்டம், தற்போது 70.41 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 748 கன அடியாக உள்ளது. தற்போது அணையில் நீர் இருப்பு 5 ஆயிரத்து 934 மில்லியன் கன அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சேலம் எஸ்விஎஸ் நகைக்கடை மோசடி; பணத்தை மீட்டுத்தர பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை!