நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்ட முதலாமாண்டு மாணவர் உதித்சூர்யாவையும், அவரது பெற்றோரையும் தேனி சிறப்பு தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், திருப்பதியில் தலைமறைவாக இருந்த உதித்சூர்யா, அவரது பெற்றோரைக் கைது செய்த தேனி சிறப்பு தனிப்படை காவல் துறையினர், சென்னையில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்காக தேனிக்கு அழைத்து வரப்பட்டனர்.
தேனி சமதர்மபுரத்தில் உள்ள மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்திற்கு நள்ளிரவு 1.30 மணி அளவில் பலத்த பாதுகாப்புடன் மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தையான மருத்துவர் வெங்கடேஷ், தாய் கயல்விழி ஆகியோரை சிபிசிஐடி காவல் துறையினர் அழைத்து வந்தனர். இன்று காலை சிபிசிஐடி தென்மண்டல கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் விசாரணை நடத்த உள்ளனர்.