தேனி: கூடலூர் அருகேயுள்ள கருநாக்கமுத்தன்பட்டி பகுதியைச் சேர்ந்த பரமன் மகன் தினேஷ் (16), பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுவருகிறார். நேற்றிரவு மாடுகளின் தீவனத்திற்காக புல் அறுத்துவருவதாக வீட்டில் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
இரவு முழுவதும் வீடு திரும்பாத நிலையில், இன்று காலை சுருளி அருவி அருகேயுள்ள மலைப்பகுதியை ஒட்டியுள்ள தனியாருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் தினேஷ் இறந்து கிடப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
அதனடிப்படையில், சம்பவ இடத்திற்குச் சென்று பெற்றோர், உறவினர்கள், காவல் துறையினர் பார்க்கையில், தினேஷ் உடலில் மின்சாரம் பாய்ந்து இறந்திருப்பது தெரியவந்தது. மேலும், அங்கு நான்கு நாய்களும் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தன. சம்பவ இடத்தில் மின்வேலி ஏதும் இல்லாதது காவல் துறையினருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.