ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மீட்டர் கேஜ் ரயில் பாதையாக உருவாக்கப்பட்ட போடி - மதுரை வழித்தடத்தை, அகல ரயில் பாதையாக மாற்ற திட்டமிடப்பட்டது. அதன்படி, கடந்த 2010ஆம் ஆண்டு வரை பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. பின்னர் இந்த ரயில் தடத்தை அகலப்பாதையாக மாற்ற ரயில்கள் நிறுத்தப்பட்டு மீட்டர் கேஜ் ரயில் பாதை அகற்றப்பட்டது.
போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் ஆமை வேகத்தில் பணிகள் நடந்துவந்ததால், கடந்த 10 ஆண்டுகளாக ரயில் போக்குவரத்து இல்லாத மாவட்டமாக தேனி இருந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக மதுரை - போடி அகல ரயில் பாதை திட்டத்திற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டதால் பணிகள் வேகமெடுக்கத் தொடங்கின.
மதுரை முதல் உசிலம்பட்டி வரையிலான 37 கிலோ மீட்டர் வழித்தடம் நிறைவு பெற்று முதற்கட்டமாக கடந்த ஜனவரி மாதம் சோதனை ஓட்டமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உசிலம்பட்டி முதல் போடி வரையிலான 53 கிலோ மீட்டர் தூர வழித்தடங்களில் பணிகள் துரிதமாக நடந்துவருகிறது. தற்போது, உசிலம்பட்டி முதல் ஆண்டிபட்டி வரையிலான 21 கிலோ மீட்டர் தூர பணிகள் நிறைவடைந்துள்ளன.