தேனி மாவட்டம் போடி அருகே 17 வயது சிறுமிக்கு தாய் - தந்தை இல்லாததால் தாத்தா -பாட்டி பராமரிப்பில் வளர்ந்துவந்தார். கரூர் மாவட்டத்தில் உள்ள செவிலியர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு நர்சிங் படித்துவந்த இவருக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு வயிற்று வலி ஏற்படவே போடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி கர்ப்பமாக இருப்பதாகவும், அவருக்கு வந்தது வயிற்று வலி கிடையாது. பிரசவ வலி என்று கூறியுள்ளனர்.
மாணவி மரணம்
இதற்கிடையே மாணவிக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்திற்குப் பின்னர் மாணவிக்கு ரத்தப்போக்கு அதிகமாகி உடல்நலம் குன்றியதால் மேல்சிகிச்சைக்காக தாயும் - சேயும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி மாணவி உயிரிழந்தார். பிறந்த குழந்தையை பச்சிளம் குழந்தைகள் பிரிவில் சேர்க்கப்பட்டு இன்குபேட்டர் மூலம் பராமரிக்கப்பட்டுவருகிறது.