ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள குன்னூர் பகுதியில் பாயும் வைகை ஆற்றில் இன்று காலை அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த க.விலக்கு காவல் துறையினர், வைகை ஆற்றுப் பாலத்தின் அருகேயிருந்த சடலத்தைத் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் மீட்டனர்.
கைப்பற்றப்பட்டவர் சுமார் 50 வயது மதிக்கத்தக்கவராக இருக்கலாம் என்றும் உடல் முழுவதும் அழுகிய நிலையில் இருந்ததால், இறந்தவர் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை என்றும் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.