தேனி மாவட்டத்திற்கு திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிப்ரவரி 9, 10 ஆகிய இரண்டு நாள்கள் தேர்தல் பரப்புரைக்காக வருகைபுரிந்தார். அவர் ஆண்டிபட்டி, கம்பம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். ஆண்டிபட்டியில் முதல் பரப்புரையைத் தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் அடுத்து மொட்டனூத்து ஊராட்சியில் திறந்தவெளி வேனில் பேசினார்.
பேசி முடித்துவிட்டு காரில் ஏறி கிளம்பிய உதயநிதி ஸ்டாலினிடம் சாலையின் ஓரத்தில் நின்று குச்சி ஐஸ் சாப்பிட்டுக்கொண்டிருந்த சிறுவர்கள் கடிதம் ஒன்றை கொடுத்தனர்.
அதில், கன்னியப்பிள்ளைபட்டி கிராமத்தைச் சேர்ந்த தங்களுக்கு கிரிக்கெட் விளையாட பேட் வேண்டும் எனச் சிறுவர்கள் எழுதியிருந்தனர். அதனை ஏற்ற உதயநிதி ஸ்டாலின் உடனே நிறைவேற்றுவதாக சிறுவர்களிடம் உறுதியளித்துச் சென்றார். மதிய உணவிற்காக சின்னமனூரில் உள்ள தனியார் விடுதியில் உதயநிதி தங்கினார். மாலையில் கம்பம் சட்டப்பேரவைத் தொகுதியில் பரப்புரை மேற்கொள்ளவிருந்தார்.