விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதும், குண்டாஸ் வழக்குப்பதிவு செய்ததும் திமுக தான் - ஆர்.பி உதயகுமார் பேட்டி! தேனி:முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்டம் பதினெட்டாம் கால்வாய், தந்தை பெரியார் மற்றும் பிடிஆர் ஆகிய 3 கால்வாய்களுக்குத் தண்ணீர் திறக்கக் கோரி இன்று (டிச.14) அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உத்தமபாளையம் புறவழிச்சாலை பிரிவில் அதிமுக மேற்கு மாவட்டச் செயலாளர் ஜக்கையன் தலைமையில் நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பங்கேற்றுக் கண்டன உரையாற்றினார்.
அப்போது பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடக் கூறும் விவசாயிகள் மீது குண்டாஸ் போடும் மக்கள் விரோத அரசு, இந்த விடியா திமுக அரசு. எல்லோருக்கும் தெரிந்த வடகிழக்கு பருவமழைக் காலம் முதலமைச்சர் ஸ்டாலினுக்குத் தெரியாததால் தான் சென்னை தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்து வெள்ள காலங்களில் ஒரு உயிரிழப்பு கூட இல்லாமல் மக்களைக் காப்பாற்றினார். ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ள பாதிப்பிற்கு அமைச்சர் குழுவை அமைக்காமல் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினுக்குப் பரிவட்டம் கட்டுவதற்காகச் சேலம் மாநாட்டிற்கு அமைச்சர் குழுவை அமைத்திருக்கிறார். முதலமைச்சருக்கு மக்கள் மீது அக்கறை இருக்குமானால் சென்னை வெள்ளத்திற்கு, அமைச்சர் குழுக்களை அமைத்திருக்க வேண்டும்” என்று கூறினார்.
தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்படப் பாசனப் பகுதி விவசாயிகள் என ஏராளமானோர், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்திக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதையடுத்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஆர்.பி உதயகுமார், “பல்வேறு கட்ட சட்டப்போராட்டங்களுக்குப் பின், தென் மாவட்டங்களின் நீர் ஆதாரமாகத் திகழும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்ற வரலாற்றுத் தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் பெற்றுத் தந்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஆனால், திமுக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கும் விதமாகச் செயல்பட்டு வருகிறது.
முல்லைப் பெரியாறு அணையில் போதிய அளவு நீரிருப்பு இருந்தும் பதினெட்டாம் கால்வாய், தந்தை பெரியார் மற்றும் பிடிஆர் ஆகிய 3 கால்வாய்களுக்குத் தண்ணீர் திறக்காமல் இருப்பதால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களின் சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளது. இதே போல மதுரையில் உள்ள திருமங்கலம், மேலூர் உள்ளிட்ட கால்வாய்களுக்கும் தண்ணீர் திறக்காமல் விவசாயிகளை திமுக அரசு வஞ்சிக்கிறது.
இந்த நிலையில், அந்த பிரச்சனைக்குத் தீர்வு காணாமல், போராடும் விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை மேலும் வேதனைக்குள்ளாகி வருகிறது. மின்சார கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதும், வாழ்வாதாரத்திற்காகப் போராடியவர்கள் மீதும் குண்டாஸ் வழக்குப்பதிவு செய்ததும் திமுக அரசு தான். திமுக அரசின் தவறான நடவடிக்கைகளால் தான் சென்னை மக்கள் தண்ணீரில் தத்தளித்து கண்ணீர் வடிக்கின்றனர்.
தேனி மாவட்ட மக்கள் தண்ணீர் இல்லாமல் கண்ணீர் வடிக்கின்றனர். எனவே, விரைவில் பாசனக் கால்வாய்களுக்குத் தண்ணீர் திறக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அதிமுக சார்பில் அடுத்தடுத்து போராட்டம் நடத்தப்படும்” என்றார்.
இதையும் படிங்க:முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிப்பு..!