தேனி:தேனி மாவட்டத்தில் இருந்து குமுளி, கம்பம் மெட்டு வழியாக கேரள பகுதிகளுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. இதனைத் தடுப்பதற்கு இரு மாநில அதிகாரிகளும் ஒன்றினைந்து கூட்டு நடவடிக்கை எடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் கம்பம் நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
தேனி மாவட்டத்தில் இருந்து தமிழக - கேரள எல்லை வழியாக தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்களின் ரேஷன் கார்டு பறிமுதல் செய்யப்படும் என இரு மாநில குடிமை பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவினரின் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை ரேஷன் அரிசியை வியாபாரிகள் பொதுமக்களிடம் விலைக்கு வாங்கி அரிசியாகவும், ரைஸ்மில்களில் அரைத்து டன் கணக்கில் மாவாகவும் அரைத்து, தமிழக - கேரள எல்லையில் உள்ள குமுளி மற்றும் கம்பம் மெட்டு சோதனை சாவடி வழியாக கட்டப்பனை, நெடுங்கண்டம், வண்டிப்பெரியார் உள்பட கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு இடைத்தரகர்கள் மூலம் கொண்டு வந்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகின்றனர்.
தொடர்ந்து நடந்து வரும் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுப்பதற்காக தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த இரு மாநில போலீசாரும், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு துறை அதிகாரிகளும் இணைந்து கம்பம் நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள்.