தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டி கிராமத்தில், ஒரு சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் கஞ்சா விற்று வருவதாக பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக, அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் புகார் கொடுத்துள்ளனர். காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் கஞ்சா விற்பனையாளர்களுக்குத் தெரிய வரவே, புகார் கொடுத்த எதிர் சமூகத்தினரின் வீட்டை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக சேதப்படுத்தப்பட்ட வீட்டைக்கொண்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சேதப்படுத்தப்பட்ட வீட்டைக்கொண்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கஞ்சா விற்பனை செய்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தை சில நாட்களுக்கு முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக, இரு தரப்பினருக்கும் இடையே அப்பகுதியில் அவ்வப்போது மோதல் இருந்து வந்ததுள்ளது. இந்நிலையில், நேற்று கைலாசப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிலர் பெரியகுளம் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஆறுமுகத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.
அங்கு, இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை இருப்பதாகவும் காவல்துறையினர் தலையிட்டு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால், காவல் துறையினர் இதை பெரிதாக எண்ணாமல் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து நேற்று மாலை இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கம்பி, அரிவாள், உருட்டுக்கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட 7 பேர் வெட்டு காயமடைந்துள்ளனர்.