தேனி:பெரியகுளம் அருகே சொர்க்கம் கோம்பை என்ற வனப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வேலியில் கடந்த 27ஆம் தேதி சிறுத்தை ஒன்று சிக்கி இருப்பதாக, அதைப் பார்த்த விவசாயி வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் வேலியில் சிக்கியிருந்த இரண்டு வயது சிறுத்தையை காப்பாற்ற முயன்றபோது அது தானாகவே வேலியில் இருந்து தப்பி ஓடியதாகவும், தப்பிச்செல்லும்போது தேனி உதவி வனப்பாதுகாப்பு அலுவலர் மகேந்திரனை தாக்கி விட்டு தப்பித்துச்சென்றதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். சிறுத்தை தாக்கியதில் மகேந்திரனின் இடது கையில் காயம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று பின் அவர் வீடு திரும்பினார்.
தப்பிச்சென்ற சிறுத்தை அதற்கு மறுநாளே தப்பிய இடத்தில் உள்ள அதே வேலியில் சிக்கி உயிரிழந்திருப்பதாக, அங்கிருந்த விவசாயிகள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். வேலியில் சிக்கி உயிரிழந்த சிறுத்தையை மீட்டெடுத்து, கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, அவசர அவசரமாக பிரேதப் பரிசோதனை செய்து, அதே இடத்தில் குழி தோண்டி சிறுத்தையை எரித்ததாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மின்வேலியில் சிக்கி தப்பிய சிறுத்தை மறுநாளில், அதே மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் வன உயிரின ஆர்வலர்கள் இடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து தேனி மாவட்ட வன அலுவலர் விரிவாக விசாரிக்க வேண்டும் எனவும் அப்பகுதியினர் கோரிக்கையும் விட்டிருந்தனர்.
சிறுத்தை, வேலியில் சிக்கி உயிரிழந்த இடம் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்துக்குச் சொந்தமான தோட்டம் என்பதால் வனவிலங்குகள் வருவதைத் தடுக்க, தனது தோட்டத்தைச்சுற்றி அமைத்திருந்த அந்த வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்தது.