தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் ஆகிய சட்ட விரோத செயல்கள் நடப்பது தொடர் கதையாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி உத்தரவிட்டார்.
இதையடுத்து தனிப்படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில், கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி ஆந்திராவில் இருந்து தேனி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு கடத்தப்படவிருந்த 176 கிலோ கஞ்சா கம்பம் அரசுப்போக்குவரத்து பணிமனை அருகே கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக கம்பம் உலகத்தவர் தெருவைச் சேர்ந்த வேல்முருகன்(45), விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த குபேந்திரன் (37) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இது தவிர கடத்தலுக்குப் பயன்படுத்திய பிக்கப் வேன், சொகுசுகார், ஸ்கூட்டர் ஆகிய மூன்று வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் கடத்தல் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான கோம்பை ரோடு தெருவை சேர்ந்த மலைச்சாமி, கண்ணன், உலகத்தவர் தெருவைச் சேர்ந்த காளிராஜ் ஆகிய 3 பேரை காவல் துறையினர் தேடி வந்தனர். இவர்களில் காளிராஜ் சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து வழக்கின் முக்கிய குற்றவாளிகளான கண்ணன், மலைச்சாமியை பிடிப்பதற்கு கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சிலைமணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக பல்வேறு ஊர்களில் தேடுதல் பணி நடைபெற்றது.
இந்நிலையில் திருப்பூரில் பதுங்கி இருந்த மலைச்சாமி, கண்ணன் ஆகிய இருவரையும் தனிப்படையினர் கைது செய்து தேனி மாவட்டத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் இருவரிடம் விசாரணை செய்து உத்தமபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கஞ்சா கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல்!