கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்களை பாதுகாக்கும் விதத்தில் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளனர். இதனால் நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களை மட்டும் விற்பனை செய்யவும், மதுபானக் கடைகளை அடைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்தும் விதத்தில் காவல் துறையினரும் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலடிப்படையில் தேடுதல் வேட்டை நடத்திய காவல் துறையினர், சிறப்பாறை கிராமத்தைச் சேர்ந்த சிவனேஷ் (29), தங்கப்பாண்டி (23) ஆகிய இருவரும் வீட்டிலேயே கள்ளச்சாராயம் காய்ச்சியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அங்கிருந்த சாராய ஊறல்களையும் அழித்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி, இதுவரை தேனி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து சுமார் 18 ஆயிரம் லிட்டர் அளவிலான கள்ளச்சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: கள்ளச்சாராயம் காய்ச்சிய சகோதரர்கள் கைது!