தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலை அமைக்க முட்டுக்கட்டை போடும் வனத் துறை: பழங்குடியினர் ஆர்ப்பாட்டம் - பழங்குடியின மக்கள்

தேனி: பெரியகுளம் அருகே வனத் துறையின் முட்டுக்கட்டையால் பாதியில் நிற்கும் மலைக்கிராம சாலைப்பணிகளை விரைந்து முடிக்கக்கோரி பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலைப்பணிகளுக்கு முட்டுக்கட்டையிடும் வனத்துறையை கண்டித்து மலை வாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்
சாலைப்பணிகளுக்கு முட்டுக்கட்டையிடும் வனத்துறையை கண்டித்து மலை வாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்

By

Published : Sep 11, 2020, 10:11 AM IST

சாலை அமைக்க முட்டுக்கட்டை போடும் வனத் துறை: பழங்குடியினர் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது அகமலை ஊராட்சி. இந்த ஊராட்சிக்குள்பட்ட கண்ணக்கரை பகுதியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் மருதையனூர், சொக்கன் அலை, பட்டூர், படப்பம்பூர், அலங்காரம், சூலையூர் ஆகிய ஆறு மலை கிராமங்கள் உள்ளன.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் போடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட இந்த மலை கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன.

இதில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் மலைவாழ் பழங்குடியின மக்கள் ஆவர். சாலை வசதி இல்லாமல் பல தலைமுறைகளாக அவதிப்பட்டுவந்த அப்பகுதி மக்கள், ஆட்சியாளர்கள், அலுவலர்களிடம் கோரிக்கைவைத்தனர்.

அதனடிப்படையில் துணை முதலமைச்சர் உத்தரவின்பேரில் கண்ணக்கரை முதல் மருதையனூர் வரை உள்ள 2.5 கி.மீ. தூர சாலையை 38 லட்சம் ரூபாய் செலவில் அமைக்க ஒப்பந்தம் விடப்பட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டு ஒரு கிலோமீட்டர் தூரம் பணிகள் நடைபெற்றன.

ஆனால் மலைப்பாதையில் உள்ள 8 மரங்களை வெட்டுவதற்கு வனத் துறையினர் தடைபோடுவதால் சாலை அமைக்கும் பணி பாதியில் நிற்கிறது.

இந்நிலையில் வனத் துறையின் செயலைக் கண்டித்து மலைவாழ் பழங்குடியின மக்கள் நேற்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாலைப்பணிகளுக்காக மரம் வெட்ட வனத் துறை அனுமதி அளித்து தங்களின் வாழ்வாதாரம் காத்திட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில், சாலை வசதி இல்லாததால் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் கொண்டுசெல்வதற்கும், அவசரகால மருத்துவ சிகிச்சைக்கும் பெரிதும் சிரமப்பட்டுவருகின்றோம்.

பிரசவத்திற்காக கர்ப்பிணிகளை டோலி கட்டி தூக்கிச் செல்லும் சூழல் உள்ளது. சாலை அமைப்பதற்கு அரசு உத்தரவிட்டும் மரங்களை வெட்டுவதற்கு வனத் துறை முட்டுக்கட்டை போடுவதால் மேலும் சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details