தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வனத் துறை கடும் கட்டுப்பாடு: குரங்கணியில் இறந்தவரின் உடலை தோளில் சுமந்துசென்ற அவலம்! - இறப்பு விவகாரம்

தேனி: குரங்கணியில் வனத் துறையின் கடும் கட்டுப்பாடு காரணமாக, இறந்தவரின் உடலை மலைப்பாதையின் வழியாக ஆறு கிலோ மீட்டர் தூரம் தோள்களில் உறவினர்கள் சுமந்துசென்ற அவல சம்பவம் அரங்கேறியுள்ளது.

tribals people death issues

By

Published : Sep 7, 2019, 9:31 AM IST

போடி அருகே உள்ள குரங்கணி மலைகிராமத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது. மலையேற்ற பயிற்சிக்குச் சென்ற பலர் காட்டுத்தீயில் சிக்கி இறந்ததை அனைவரும் அறிவோம். இச்சம்பவத்திற்கு பிறகு குரங்கணி மலையில் உள்ள மலைக்கிராம மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது வனத் துறை.

முதுவார்க்குடி கிராமத்தின் பாதையை அடைத்த வனத் துறை

அதில் ஒரு பகுதியாக, குரங்கணியிலிருந்து ஆறு கி.மீ. தூரத்தில் உள்ளது முதுவார்க்குடி கிராமம். சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்திற்கு நடந்தோ அல்லது ஜீப் மூலமாக மட்டுமே செல்ல முடியும். ஆரம்ப காலம் முதல் இந்த மலைப்பாதையை அக்கிராம மக்கள் பயன்படுத்திவந்த நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக இந்தப் பாதையை மூடியது வனத் துறை.

கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்றால் நடந்து மட்டுமே செல்ல முடியும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. பிரசவம் உள்ளிட்ட மருத்துவ கால அவசரம் என்றால் கூட ஆறு கி.மீ. நடந்து குரங்கணி பகுதிக்கு வரவேண்டிய என்ற துர்பாக்கிய நிலையுள்ளது.

துப்பாக்கியால் சுட்ட சக்திவேல்... மரணமடைந்த பவுன்ராஜ்

கடந்த மாதம் முதுவார்க்குடியைச் சேர்ந்த பவுன்ராஜ் என்பவருக்கும் சக்திவேல் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில் பவுன்ராஜை, நாட்டுத் துப்பாக்கியில் சக்திவேல் சுட்டார். இதில் படுகாயமடைந்த பவுன்ராஜ், மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டு முதுவார்க்குடிக்கு திரும்பினார்.இந்நிலையில், நேற்று முன்தினம் பவுன்ராஜ் மரணமடைந்தார்.

உடலை டோலி கட்டி தூக்கிச் சென்ற அவலம்

இத்தகவல் காவல் துறையினருக்கு தெரியவர, பவுன்ராஜ் உடலை உடற்கூறாய்வு செய்ய தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல திட்டமிட்டனர். ஜீப் வசதி இல்லாததால் உறவினர்கள் அவரது உடலை டோலி கட்டி தோள்களில் சுமந்தபடி தூக்கிவந்துள்ளனர். உடற்கூறாய்வு முடிந்து பவுன்ராஜின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, மீண்டும் டோலி மூலமாக உடல் முதுவார்க்குடிக்கு தூக்கிச் செல்லப்பட்டது.

கொடுமைப்படுத்தும் வனத் துறை? - வேதனையில் கிராம மக்கள்

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நாங்கள் எந்தவித நிகழ்ச்சிகளுக்கும், மருத்துவ அவசரங்களுக்கும் செல்ல முடியாமல் தவித்துவருகிறோம். வனத் துறையினர் ஏன் இப்படி எங்களை கொடுமைப்படுத்துகிறார்கள் என தெரியவில்லை. நாங்கள் வனத்திற்குள் என்ன தவறா செய்கிறோம். காலம் காலமாக குடியிருக்கும் இடத்தை விட்டு வெளியேறச் சொல்கிறது வனத்துறை. இதற்கு எப்பொழுது தீர்வு கிடைக்கும் எனத் தெரியவில்லை என்கின்றனர் வேதனையுடன்.

மக்களவைத் தேர்தலை புறக்கணித்த மக்கள்

அந்த மக்களின் வேதனைக்குரல் அரசுக்கு கேட்கவில்லையா என்பது சமூக செயற்பாட்டாளர்களின் கேள்வியாக உள்ளது. தங்கள் ஊருக்கு செல்லும் பாதைக்கான தீர்வுகாண நடைபெற்றுமுடிந்த மக்களவைத் தேர்தலை இப்பகுதி மக்கள் முற்றிலுமாக புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details