தேனி: தேனி மாவட்டம், போடிநாயக்கனூரிலிருந்து சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது குரங்கணி மலைவாழ் கிராமம். இங்கிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சென்ட்ரல் ஸ்டேஷன் குக்கிராமம். இதற்கு அருகாமையிலேயே முட்டம், முதுவாக்குடி, டாப் ஸ்டேஷன் போன்ற பகுதிகள் உள்ளன. இப்பகுதிகள் முழுவதும் தேயிலை, ஏலக்காய், மிளகு, காபி, இலவம் பஞ்சு போன்ற பணப்பயிர்கள் பயிரிடப்பட்டு உலக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
ஆனால், போடிநாயக்கனூரில் இருந்து குரங்கணி வரை மட்டுமே தார்ச் சாலை உள்ள நிலையில், குரங்கணியில் இருந்து இப்பகுதிகளுக்குச் சாலை வசதி இல்லை. இதனையடுத்து, இம்மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருக்கும் சாலை வசதி, இந்நாள் வரை கனவாகவே இருந்து வருகிறது. இப்பகுதிகளில், சுமார் 250 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். சென்ட்ரல் ஸ்டேஷன் பகுதியில் மட்டும் சுமார் 100 குடும்பங்களுக்கு மேல் மலைவாழ் பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களின் தொழில் என்று பார்க்கையில் முழுக்க முழுக்க விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த கூலி வேலைகளையே இவர்களின் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். தேர்தல் சமயத்தில் கூட இப்பகுதிகளுக்குக் கொண்டு வரப்படும் வாக்குப் பெட்டி மற்றும் வாக்குச்சாவடிக்கான உபகரணங்கள் குதிரைகள் மற்றும் கழுதைகள் மூலமாகவே இன்று வரை கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அவ்வளவு தானா என்று சிந்தித்துப் பார்க்கையில், செல்போன் மற்றும் தொலைப்பேசி வசதிகளும் முறையாகச் செய்து தரப்படவில்லை.
முன்பு டாப் ஸ்டேஷன் வரை ஜீப் போக்குவரத்து இருந்த நிலையில், தற்போது வனத்துறை கட்டுப்பாடுகள் காரணமாக ஜீப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், டாப் ஸ்டேஷன் செல்லும் சாலைகள் முழுவதும் புதர் மண்டி ஒற்றையடிப் பாதை போல் காட்சி அளித்து வருகிறது. இப்பகுதியில் வசித்து வரும் மக்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவச் சிகிச்சைக்காக சுமார் ஐந்தரை கிலோமீட்டர் கால்நடையாகவோ அல்லது டோலி மூலமாகவோ குரங்கணி வரை கொண்டு வரப்பட்டு அங்கிருந்து போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்படுகின்றனர்.
இப்படி எந்த வசதியுமின்றி அக்கிராம மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், சென்ட்ரல் ஸ்டேஷனில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருபவர் டேவிட். இவரது மனைவி வேளாங்கண்ணி(வயது 60). கடந்த ஒரு வாரக் காலமாகக் காலில் ஏற்பட்ட காயத்தினால் வீட்டை விட்டு வெளியேறவே முடியாமல் அவதிக்குள்ளாகி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று(ஜன.7) முன்தினம் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், உடனடியாக மருத்துவச் சிகிச்சைக்குக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.