தேனி மாவட்டம் போடி அருகே போடி மெட்டு மலைச்சாலை உள்ளது. கொச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள இவ்வழித்தடத்தில் மூணாறு, பூப்பாறை, நெடுங்கண்டம், ராஜாக்காடு உள்ளிட்ட கேரளாவின் முக்கிய பகுதிகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆகியோர் சென்று வருகின்றனர்.
போடி அருகே உள்ள முந்தல் பகுதியில் இருந்து 20 கி.மீ. தூரமுடைய இந்த மலைச்சாலையில் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்த சாலையை அகல படுத்துவதற்காக பாறைகளுக்கு வெடி வைத்து அகற்றப்பட்டதால் பாறைகள் ஆங்காங்கே பிளவு ஏற்பட்டு எந்த நேரத்திலும் நிலச் சரிவு ஏற்படும் வகையில் இருந்து வருகிறது.
இந்த சூழலில் போடிமெட்டு-மூணார் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆறாவது கொண்டை ஊசி வளைவில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவு காரணமாக சாலையில் மண் குவியலாக கிடக்கிறது. இன்று அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவினால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.