மதுரை-போடி இடையே 110 கி.மீ வேகத்தில் ரயிலை இயக்க நடவடிக்கை தேனி: தண்டவாளங்களில் வேகம் அதிகரிக்கப்படுவதால் ஏற்படும் அதிர்வலைகள் மற்றும் பாதிப்புகள் குறித்து கண்டறிவதற்காக மதுரை-போடி வரையிலான ரயில் பாதையில் 110 கி.மீ வேகத்தில் ரயிலை இயக்குவதற்கான சோதனை ஓட்டம் நேற்று (அக்.12) நடந்தது.
மதுரை மற்றும் சென்னையில் இருந்து போடிநாயக்கனூர் வரும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க திட்டமிட்டு, மதுரையில் இருந்து போடிநாயக்கனூர் வரை 110 கிலோ மீட்டர் வேகத்தில் மூன்று ஆய்வு பெட்டிகளுடன் ரயில் இயக்கப்பட்டு சோதனை நடைபெற்றது.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ரயில்வே நிலையத்தில் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டர்கேஜ் பாதைகள் அகற்றப்பட்டு, அகல ரயில் பாதை பணிகள் முடிந்து, தேனிக்கு 2022 மே 26-இல் ரயில் போக்குவரத்து துவங்கியது. அதன் பிறகு, 2023 பிப்ரவரி மாதம் முதல் மதுரையில் இருந்து போடி வரை தினசரி மற்றும் சென்னையிலிருந்து போடிக்கு வாரத்தில் மூன்று நாட்களும் ரயில் போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க:கரூரில் புதிய கல்குவாரிகள் அமைக்க எதிர்ப்பு.. ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
இந்நிலையில், இவை அதிகபட்சமாக மதுரையில் இருந்து தேனி வரை 100 கி.மீ வேகத்திலும், தேனியில் இருந்து போடிக்கு 90 கி.மீ வேகத்தில் இயக்க அனுமதிக்கப்பட்டு, பின்னர் 100 கி.மீ வேகம் உயர்த்தி அனுமதிக்கப்பட்டது. தெற்கு ரயில்வே இருப்புப் பாதை பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் வழித்தடத்தில், தண்டவாளத்தின் அதிர்வு தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்வர்.
அதன்படி, ரயிலில் வேகத்தை அதிகரிக்கும் வகையில் நேற்று ஓஎம்எஸ் என்று அழைக்கப்படக் கூடிய இருப்புப் பாதை அதிர்வு ஆய்வு கொண்ட 3 பெட்டிகளுடன், மதுரையில் இருந்து போடிநாயக்கனூர் ரயில்வே நிலையம் வரை சுமார் 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மதுரையில் இருந்து புறப்பட்டு போடிநாயக்கனூர் வரை 110 கிலோ மீட்டர் வேகத்தில் வந்தடைந்த சோதனை ரயில், மீண்டும் போடிநாயக்கனூரில் இருந்து மதுரைக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று சோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து, மதுரை மற்றும் போடி இடையே 110 கி.மீ வேகத்தில் இயக்க உத்தரவிடப்பட்டது.
இதையும் படிங்க:மூட்டை மூட்டையாக கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கழிவுகள்.. நெல்லையில் பரபரப்பு!