தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 14ஆவது வார்டு அழகு பிள்ளை தெருவில் 75 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்னதாக வயிற்றுப்போக்கு காரணமாக அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பிய நிலையில், சிகிச்சையில் இருந்த போது அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஜூன் மாதம் 27ஆம் தேதி மூதாட்டிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மூதாட்டி நேற்று (ஜூலை 31) உயிரிழந்தார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர், மூதாட்டியின் சடலத்தை வேகமாக அடக்கம் செய்ய வற்புறுத்தியுள்ளனர்.
மூதாட்டியின் சடலத்தை தள்ளுவண்டியில் சடலத்தை எடுத்துச் சென்ற அவலம் இது குறித்து நகராட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல மணி நேரம் கடந்தும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் அருகில் வசிப்பவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக வேறு வழியின்றி மூதாட்டியின் சடலத்தை ஒரு போர்வையில் சுற்றி தள்ளுவண்டியில் வைத்து, கூடலூர் மயானத்திற்கு எடுத்துச் சென்றுள்ள சம்பவம் நடந்துள்ளது.
கூடலூரின் முக்கிய வீதிகள் வழியே தள்ளுவண்டியில் சடலத்தை எடுத்துச் செல்லப்பட்டது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வடமாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வந்த நிலையில், தமிழ்நாட்டிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கத் தொடங்கியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரோனாவால் மக்களின் மனிதமும் குறைந்துள்ளது என்பதே இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்துகிறது.
இதையும் படிங்க:சடலத்தை எடுக்க மறுத்த மக்கள்...! ஜேசிபியில் மயானத்திற்கு கொண்டுச் சென்ற அவலம்!