தேனி மாவட்டம் கம்பம் அருகே அமைந்துள்ளது சுருளி அருவி. மேற்குத்தொடர்ச்சி மலையடிவார பகுதியில் இயற்கை எழில்சூழ்ந்து ரம்மியமாக காட்சியளிக்கும் இந்த அருவியில் விழுகின்ற தண்ணீரானது குளிர்ச்சியாவும், மூலிகைத்தன்மை வாய்ந்ததாகவும் இருப்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். மேலும் தற்போது சபரிமலை சீசன் என்பதால் ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களும் இங்கு புனித நீராடுவதற்காக வந்து கொண்டிருக்கின்றனர்.
இதனிடையே அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேகமலை, இரவங்கலாறு உள்ளிட்ட வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் நீர் வரத்து அதிகரித்து கடந்த சில தினங்களுக்கு முன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நவம்பர் 29ஆம் தேதி முதல் சுருளி அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவந்த தொடர்மழை படிப்படியாக குறையத் தொடங்கியதால் அருவிக்கு வரும் நீர்வரத்து சீரானது. இதனையடுத்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்டோர் அருவியில் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்தனர்.
சுருளி அருவியில் உற்சாக குளியல்போட்ட சுற்றுலாப் பயணிகள் இதே போன்று பெரியகுளம் அருகே அமைந்துள்ள கும்பக்கரை அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கு குளிப்பதற்கு கடந்த டிசம்பர் 02ஆம் தேதி முதல் வனத்துறையினர் தடை விதித்தனர். இதனிடையே நேற்று நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டபோதிலும், அருவிக்கு அருகாமையில் உள்ள இடங்களில் வனத்துறையினரின் கண்காணிப்பில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து நீர்வரத்து சீரானதும் அருவிப்பகுதியில் வழக்கம் போல் குளிப்பதற்கு அனுமதியளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
வனத்துறையின் கண்காணிப்பில் கும்பக்கரை அருவியில் குளித்த சுற்றுலாப் பயணிகள் நீர்வரத்து சீராகத நிலையில், போதிய பாதுகாப்பு இல்லாமல் அருவியின் அருகாமையில் உள்ள இடங்களில் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி வழங்கியிருப்பது விபத்துகளை ஏற்படுத்துதவற்கு வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து அருவியில் நீர்வரத்து சீரானதும் குளிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.