போடி மெட்டு பகுதியில் உருவாகிய புதிய நீர்வீழ்ச்சிகள்.. தேனி: போடிநாயக்கனூர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தற்பொழுது பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், கடந்த இரண்டு தினங்களாகப் பெய்த கனமழை காரணமாக போடி மெட்டு மலைச் சாலைகளில், ஆங்காங்கே நீர்வீழ்ச்சிகள் புதிது புதிதாகத் தோன்றி, ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.
தற்போது தமிழகத்திலிருந்து இடுக்கி மாவட்டத்திற்குச் சுற்றுலா செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மழைக்காலம் என்ற பொழுதிலும், ஆங்காங்கே மண் சரிவுகள் அவ்வப்போது ஏற்பட்டு வரும் நிலையிலும், இன்று (டிச.10) விடுமுறை தினம் என்பதால் கேரளா செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்பட்டது.
மேலும், சென்னை, மதுரை, திருச்சி மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் போடி மெட்டு மலைச்சாலை வழியாகக் கேரளா செல்கின்றனர். இந்த நிலையில், அவ்வாறு செல்லும் சுற்றுலாப் பயணிகளை, சமீப காலமாகப் பெய்து வந்த மழை காரணமாகப் பச்சை பசேல் என்று இயற்கை எழில் கொஞ்சம் வகையில் இருக்கும் போடி மெட்டு மலைச் சாலை பகுதி ஈர்த்து வருகிறது.
இதன் காரணமாக, ரம்மியமாகக் காட்சியளிக்கும் போடி மெட்டு மலைச் சாலை பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில், சுற்றுலாப் பயணிகள் குடும்பங்களுடன் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். மேலும், தற்போது பெய்து வரும் மழை காரணமாக போடி மெட்டு மலைச் சாலையில் அமைந்துள்ள புலியூத்து அருவியில் நீர்வரத்து சற்று அதிகரித்து உள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகள் அங்கு நீராடியும் மகிழ்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க:குன்னூர் - மேட்டுபாளையம் சாலையில் மண் சரிவு: போக்குவரத்து நெரிசலில் சிக்கிய மத்திய இணை அமைச்சர் வாகனம்!