தேனி: போடிநாயக்கனூரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, சோலையூர் மலைக் கிராமம். மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இப்பகுதியில், தற்போது கத்திரிக்காய் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. சுமார் 60 நாள் பயிரான கத்திரிக்காய், அறுவடை செய்யப்படும் நேரத்தில் புழு தாக்குதல் நோய் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், புழு தாக்குதல் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக மருந்துகள் தெளிக்கும் நடவடிக்கையில் விவசாயிகள் ஈடுபட்டனர். ஆனால், கடந்த 20 தினங்களுக்கும் மேல் இப்பகுதியில் பருவ காலம் தவறிப் பெய்த மழை காரணமாக, மருந்து தெளிக்கும் பணியில் பின்னடைவு ஏற்பட்டு, தெளிக்கப்பட்ட மருந்துகள் மழை நீரில் கலந்து வீணாகி உள்ளது என தெரிவித்துள்ளனர்.
இதனால் புழு தாக்குதலுடன், பருவ காலம் மாறி பெய்த மழையின் அதிக ஈரப்பதம் காரணமாக, கத்திரிக்காயில் அழுகல் நோயும் சேர்ந்துள்ளது. எனவே, இப்பகுதியில் விளைந்த கத்திரிக்காயைக் கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் செடியிலிருந்து பறிக்கப்பட்ட கத்திரிக்காய், டன் கணக்கில் சாலையில் கொட்டப்பட்டு உள்ளது.