தேனி: தமிழ்நாட்டில் தக்காளி வரத்து குறைந்து உள்ள நிலையில், அதன்தேவை அதிகரித்து உள்ளதால் தக்காளி விலை பல மடங்கு உயர்ந்து விற்பனையாகி வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்து இருப்பதாலும், உள்ளூர் பகுதிகளிலும் தக்காளியின் வரத்து குறைவாக இருப்பதால் தக்காளியின் விலை தொடர்ந்த்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
இதனையடுத்து தமிழ்நாடு அரசின் நடவடிக்கையின் காரணமாக தேனியில் வெளிச் சந்தையில் அதிக விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் உழவர் சந்தைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. தற்பொழுது ஒரு கிலோ 140 ரூபாய் வரை விற்பனையாகும் தக்காளியின் விலையை கட்டுப்படுத்த, தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
இதையும் படிங்க:தக்காளி விலை உயர்வு.. தக்காளி சாஸில் ரசம் வைத்து நூதன போராட்டம்!
அதன் ஒரு பகுதியாக, தக்காளி விலையை கட்டுப்படுத்தும் வகையில் தேனி மாவட்டத்தில் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளை வேளாண்மை துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் உழவர் சந்தைகளான தேனி, கம்பம், சின்னமனூர், பெரியகுளம் மற்றும் ஆண்டிப்பட்டி ஆகிய உழவர் சந்தைகளில் நேரடியாக விற்பனை செய்ய திட்டம் தீட்டப்பட்டு உள்ளது