தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று (நவ.29) தேனி அருகேவுள்ள அரண்மனைப் புதூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாநில பொதுச்செயலாளர் மயில் கூறுகையில், “தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்களுக்கு நடைமுறையிலுள்ள தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது முக்கிய கோரிக்கை. இதனை ஏற்று இத்திட்டத்தை ரத்து செய்வதாக கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார்.
ஆனால், தற்போது வரை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே தமிழ்நாடு அரசு தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும்.
50 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் பெற்றுவந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதியத்தை ரத்து செய்து வெளியிடப்பட்ட அரசாணையை திரும்பப் பெற வேண்டும். மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் பொன் கலையரசன் தலைமையிலான குழு பரிந்துரைத்த 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
மேலும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு 5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தார்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டம் அதன்படி வருகிற டிசம்பர் 17 ஆம் தேதியன்று அனைத்து வட்டார கல்வி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும், 2021 ஜனவரி 9ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டமும், அதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் சென்னையில் பத்தாயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டணத்தை குறைக்கக்கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்