தேனி மாவட்டம் போடி வலசுத்துறையில், இன்று தமிழக அரசின் பல்வேறு திட்டப்பணிகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது. இதில் தமிழக துணை முதலமைச்சரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார்.
தேனி மாவட்டத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்துவந்த மக்கள் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியத்தின் சார்பில் தேனி, போடி, தேவதானப்பட்டி, உத்தமபாளையம் உள்ளிட்ட 11 இடங்களில் ரூ.287.86 கோடி மதிப்பீட்டில் 2,925 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான திட்டத்தை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பூமிபூஜையுடன் தொடங்கிவைத்தார்.
மேலும், ரூ.435.13 லட்சம் மதிப்பீட்டில், குச்சனூர், வீரபாண்டி, கோம்பை, வடுகபட்டி உள்ளிட்ட 10 பேரூராட்சிகளுக்குட்பட்ட 56 குடிசைப்பகுதிகளில், சிமெண்ட் நடைபாதையில் கற்கள் பதித்தல், தார்சாலை, தெருவிளக்குகள் அமைத்தல் போன்ற பணிகளும் தொடங்கிவைக்கப்பட்டன.
இதேபோல், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், ரூ.76.15 கோடி மதிப்பீட்டில் போடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு கூடுதலாக குடிநீர் கொண்டு வருவதற்கு, குரங்கணி அருகே சாம்பாறு காட்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி அங்கிருந்து தன்னோட்ட குழாய்கள் அமைத்து சுத்திகரிப்பு செய்து, குடிநீர் வழங்குவதற்கான திட்டமும் தொடங்கிவைக்கப்பட்டது.