தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனியில் கோலாகலமாக தொடங்கிய கூடைப்பந்தாட்ட போட்டி! - basket-ball-tournament

தேனி: சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் அமரர் சிதம்பர சூரியநாராயணன் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் கோலாகலமாக பெரியகுளத்தில் தொடங்கியது.

தேனியில் கோலாகலமாக தொடங்கிய கூடைப்பந்தாட்டப் போட்டி!

By

Published : May 17, 2019, 2:15 PM IST

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் அமரர் சிதம்பர சூரியநாராயணன் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. இந்தாண்டுக்கான போட்டியானது 60ஆவது ஆண்டு வைர விழா கொண்டாடத்துடன் இன்று தொடங்கியது.

பெரியகுளம் பிஎஸ்டி மைதானத்தில் இன்று முதல் 21ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. போட்டிகள் நாக் - அவுட் மற்றும் லீக் சுற்று முறையில் நடைபெற உள்ளன. இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு சுழற்கோப்பை மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

அகில இந்திய அளவில் நடைபெறும் இப்போட்டியில் இந்திய தரை (சிவப்பு, பச்சை), விமானம், கப்பல் படை, தெற்கு ரயில்வே, கேரள மின்வாரியம், கஸ்டம்ஸ், பெங்களுரூ விஜயா வங்கி, போபால், வாரணாசி, செகந்திராபாத், தெலங்கானா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய அளவிலான 24 அணிகள் பங்கேற்கின்றன.

முதல் நாளான இன்றைய போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெரியகுளம், செங்கோட்டை, சேலம், திண்டுக்கல், தூத்துக்குடி, தஞ்சாவூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த அணிகள் மோதின. முதலாவதாக நடைபெற்ற போட்டியில் பெரியகுளம் சில்வர் ஜூபிலி விளையாட்டுக் கழகம் அணியும், செங்கோட்டை கூடைப்பந்தாட்ட கழக அணியும் களமிறங்கின. இதில், செங்கோட்டை அணி 65க்கு 47 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது.

இரண்டாவதாக நடைபெற்ற போட்டியில் வடுகபட்டி கூடைப்பந்தாட்ட கழக அணியும், திண்டுக்கல் கூடைப்பந்தாட்ட கழக அணியும் மோதியதில், திண்டுக்கல் அணி 62க்கு 43 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது. மூன்றாவதாக நடைபெற்ற போட்டியில் தஞ்சாவூர் கூடப்பந்தாட்ட கழக அணியும், கரூர் டெக்ஸ் சிட்டி அணியும் மோதியதில், கரூர் அணி 79க்கு 42 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து நான்காவதாக நடைபெற்ற போட்டியில் தூத்துக்குடி டி.பி.ஏ அணியும், சேலம் கூடைப்பந்தாட்ட அணியும் மோதியதில், சேலம் அணி 54க்கு 30 என்ற புள்ளிகள் அடிப்ப்டையில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று வெற்றி பெற்ற அணிகளுடன் நாளை தெற்கு ரயில்வே சென்னை அணி, செகந்திரபாத் ஏ.ஓ.சி, தெலங்கானா ஒய்.எம்.ஜி மற்றும் வாரணாசி டீசல் ஒர்க்ஸ் அணி ஆகியவைகள் மோத இருக்கின்றன.

ABOUT THE AUTHOR

...view details