தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றிய பகுதியில் இன்று காலை முதல் அதிமுக சார்பாக தேனி மக்களவை வேட்பாளர் ஓ.பி.ரவிந்தரநாத் குமார், பெரியகுளம் சட்டமன்ற (தனி) தொகுதி வேட்பாளர் மயில்வேல் ஆகிய இருவரும் ஒன்றாகத் திறந்த வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
ஜி.கல்லுப்பட்டியில் தொடங்கி கெங்குவார்பட்டி, தேவதானப்பட்டி, குள்ளப்புரம், ஜெயமங்களம் உள்ளிட்ட பகுதிகளில் இருவரும் பரப்புரை மேற்கொண்டனர்.
பரப்புரையின்போது, அந்தந்த பகுதியில் உள்ள அதிமுக நிர்வாகிகள் வேட்பாளர்களின் வழிநெடுகிலும் நின்று வரவேற்பளிப்பதற்காகவும், ஆரத்தி எடுக்கவும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்களை அழைத்து வந்தனர். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் சம்பவ இடத்தில் பணப்பட்டுவாடா செய்யாமல், அதிமுக நிர்வாகிகள் தனியாகச் சென்று பெண்களிடம் டோக்கன் விநியோகித்துள்ளனர்.
வெள்ளை துண்டுச்சீட்டில் சம்பந்தப்பட்ட அதிமுக நிர்வாகியின் விபரங்கள் சீல் வைத்து பெண்களிடம் கொடுத்துள்ளனர். அதனைப் பெற்றுக்கொண்ட பெண்கள் கையில் ஆரத்தி தட்டுடன் காத்திருந்து வேட்பாளர்களை வரவேற்றனர். வேட்பாளர்களின் வாக்கு சேகரிப்பிற்குப்பின் டோக்கனை பெற்றுக்கொண்ட அதிமுக நிர்வாகிகள் ரூ.200 முதல் 400 வரை பணம் வழங்கியுள்ளனர்.