குடும்ப வறுமை, பெண் குழந்தைகள் வளர்ந்து அவர்களுக்கு செய்துவைக்கப்படும் திருமணத்துக்கு ஆகும் அதிக செலவு ஆகியவற்றை கருத்தில்கொண்டு, பிறக்கும் பெண் சிசுக்களைக் கள்ளிப்பால், எருக்கம்பால் கொடுத்து படுகொலை செய்யும் சம்பவம் தொடர் கதையாகிவருகிறது. குறிப்பாக, தென்தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர் கதையாகி வந்தன.
இதைக்கருத்தில் கொண்ட தமிழ்நாடு அரசு, கடந்த 1992ஆம் ஆண்டு தொட்டில் குழந்தை திட்டத்தைக் கொண்டு வந்தது. இதன்படி, ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு தொட்டில் வைக்கப்பட்டது.
பெண் குழந்தைகளை சுமையென்று நினைக்கும் பெற்றோர், அந்தத் தொட்டிலில் தங்களது குழந்தைகளை விட்டுச் செல்லலாம். அக்குழந்தையை தொட்டில் குழந்தை மையம் மூலமாக, தமிழக அரசு தனது செலவில் வளர்த்து படிக்க வைக்கும். இத்திட்டத்தின் விளைவாக பெண் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்யப்படும் சம்பவங்கள் குறைந்து வந்தன. இது ஒருபுறமிருக்க தற்போது மீண்டும் பெண் சிசு கொலை சம்பவங்கள் ஆங்காங்கே தலையெடுக்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில்,
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள மொட்டனூத்து ஊராட்சிக்கு உட்பட்டது ராமநாதபுரம் என்ற சிறிய கிராமம். போதிய மழை இல்லாத காரணத்தாலும், மானாவாரி நிலத்தை நம்பி வாழ முடியாத காரணத்தாலும், அக்கிராம மக்கள் திருப்பூர், கோவை போன்ற நகரங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். தற்போது மொத்தம் இரண்டே குடும்பம் மட்டும் வசிக்கும் இக்கிராமத்தில் முத்துசாமி-செல்லம்மாள் தம்பதியர் வசித்துவருகின்றனர்.
இவர்களது மகன் சுரேஷ் (37). தற்போது இவர் கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும், கவிதா என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.
இருவருக்கும் 10, 8 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி இவர்களுக்கு மூன்றாவதாக மீண்டும் ஒரு பெண்குழந்தை பிறந்துள்ளது. மார்ச் 6ஆம் தேதி அக்குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டதாகக் கூறி, வீட்டின் அருகிலேயே குழி தோண்டி அடக்கம் செய்துள்ளனர்.
பிறந்து ஆறு நாட்களே ஆன குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக்கூறிய அக்கிராம மக்கள், மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் புகார் அளித்துள்ளனர். புகாரை அடுத்து விசாரணை நடத்திய குழந்தைகள் நலக்குழு அலுவலர்கள், தம்பதியர் சுரேஷ், கவிதா ஆகிய இருவரிடமும் விசாரித்தது.
விசாரணையில் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவரது உத்தரவின்பேரில் ஆண்டிபட்டி வட்டாட்சியர் மொட்டனூத்து கிராம நிர்வாக அலுவலர் ஜோதியை விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, விசாரணை செய்த வி.ஏ.ஓ., ஜோதி, குழந்தையின் தம்பதியினர் மீது சந்தேகம் இருப்பதாகக்கூறி, ராஜதானி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் முத்துச்சாமி, செல்லம்மாள், சுரேஷ், கவிதா ஆகிய நால்வரிடமும் விசாரித்தனர்.
விசாரணையில் கவிதா, செல்லம்மாள் இருவரும்தான் குழந்தைக்கு எருக்கம்பால் கொடுத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். கொலை செய்த பெண் சிசுவின் உடலை வீட்டின் அருகே புதைத்து விட்டதாகவும் அவர்கள் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்தனர்.
இதையடுத்து இருவரையும் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து ஆண்டிபட்டி வட்டாட்சியர் சந்திரசேகரன், காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன், குழந்தைகள் நல அலுவலர்கள் ஆகியோர் குழந்தை புதைக்கப்பட்ட இடம், எருக்கம்பால் எடுக்கப்பட்ட எருக்கஞ்செடி ஆகிய இடத்தைக் காட்டுமாறு கவிதாவிடம் தெரிவித்தனர். பின்னர் புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டப்பட்டு பெண் சிசுவை எடுத்து, அரசு மருத்துவர் அடங்கிய மருத்துவக்குழுவினர் சிசுவின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.
இதுதொடர்பாக காவல் துறையினர் கூறுகையில்," சம்பவம் நடந்தபோது சுரேஷ், முத்துசாமி இருவரும் அங்கு இல்லை என்பதும், கவிதா, செல்லம்மாள் ஆகிய இருவர் மீதும் ஐபிசி 174, 302, 201, 120 பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றனர்.