இந்தியாவில் 17ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக, தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி, மிகப்பெரிய தோல்வியை தழுவியது. ஆனால், தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் மட்டும் வெற்றி பெற்றார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன், அமமுக தங்கதமிழ்செல்வன் என எதிர்த்து நின்ற மூத்த அரசியல்வாதிகளை தோற்கடித்தார்.
கல்வெட்டு சர்ச்சையைடுத்து, போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய ஓபிஎஸ்.மகன்.! - poster issue
தேனி : தேனி மக்களவை தொகுதி உறுப்பினர் ஓ.பி.ரவீந்தரநாத்குமாரை மத்திய அமைச்சர் என குறிப்பிட்டு தேனியில் பல்வேறு பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது தேனி வட்டாரத்தில் ஓ.பி.ரவீந்திரநாத் குமாரின் வெற்றியை அதிமுக கட்சியினர் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இதில் சில தொண்டர்கள், ஆர்வக்கோளாறில், மத்திய அமைச்சர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் என்று போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டியுள்ளனர். தற்போது வரை அமைச்சரவையில் யார், யார் இடம்பெற உள்ளனர் என்கிற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. பிரதமர் மோடியே நாளை மறுநாள் தான், புதிய அமைச்சரவையுடன் பதவி ஏற்க இருக்கிறார். இந்நிலையில், ரவீந்திரநாத்குமாரை மத்திய அமைச்சர் என்று குறிப்பிட்டு போஸ்டர் அடித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது.
தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே கோயில் கல்வெட்டில், ரவீந்திரநாத்குமார் எம்.பி. என்று குறிப்பிடப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது அடங்குவதற்குள் தற்போது மீண்டும் போஸ்டர் சர்ச்சையில் ரவீந்திரநாத் குமார் சிக்கியுள்ளார்.