அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி ஆய்வு தேனி: தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு, தலைவர் கோவி செழியன் தலைமையில் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் நேற்று (ஆகஸ்ட் 31) தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வினை மேற்கொண்டனர்.
தேனி மாவட்டத்தில் சட்டமன்ற மனுக்கள் குழு பல்வேறு பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து, தேனி மாவட்டம் அருகே உள்ள குன்னூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்ட பொழுது, பள்ளியில் அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி காணப்பட்டதால் விசிக கட்சியின் செய்யாறு தொகுதி எம்எல்ஏ பனையூர் பாபு அதிகாரிகளைக் கண்டித்தார்.
மேலும், மனுக்கள் குழு இங்கு வருகிறோம் என்று தெரிந்தும் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார். பல வருடங்களாக இப்பகுதி இந்த நிலையில் தான் உள்ளது எனக் குற்றம் சாட்டினார். அதற்கு அதிகாரிகள் பாளம் வேலை நடப்பதால் இவ்வாறு உள்ளது என்றனர். பின்னர் அருகிலிருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் இது குறித்துப் பேசி முடிவு எடுப்போம் என்று அவரை சமாதானப்படுத்தினர்.
இதையும் படிங்க:வேலூரியில் யானை தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி!
அதனைத்தொடர்ந்து, அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி மாணவர்களைச் சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் குழுக்கள், அவர்களிடம் பள்ளியில் உள்ள பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தனர். அதற்கு மாணவர்கள் மனுக்கள் குழுவினரிடம் அவர்களின் கோரிக்கைகளை அடுக்கடுக்காக வைத்தனர்.
குறிப்பாக, பள்ளியில் விளையாட்டு மைதானம் முறையாக இல்லை என்றும் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் பள்ளிக்கு வெளியே கழிவு நீர் கால்வாய் முறையாக அமைக்காமல் இருப்பதால் துர்நாற்றம் வீசுவதாகவும் மாணவர்கள் புகார்களைத் தெரிவித்தனர்.
இந்நிலையில், புகார்களைப் பெற்ற மனுக்கள் குழுவினர் மாணவர்களிடம் கூறியதாவது, “கட்டாயமாக ஆட்சியாளர் முன்னிலையில் கூட்டம் நடத்துவோம். மேலும், உடனடியாக பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் உறுதியாகச் செய்து தருகிறோம்” என்றார். மேலும், “பழுதடைந்த நிலையில் உள்ள மின்விளக்குகளையும் உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்கிறோம்” என்றார்.
மேலும், மனுக்கள் குழுவினர் அடங்கிய கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள், தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க:யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.. கேஸ் விலை குறைப்பை சாடிய கே.எஸ்.அழகிரி