தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"கட்சிக்காகப் பாடுபட்ட முன்னோடிகளை திமுக ஒரு போதும் மறவாது" - உதயநிதி ஸ்டாலின்!

Minister Udhayanidhi Stalin: தேனியில் நடந்த கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர், திமுகவின் மூத்த உறுப்பினர்களுக்குப் பொற்கிழிகளை வழங்கினார்.

கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கிய உதயநிதி ஸ்டாலின்
கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 25, 2023, 10:28 PM IST

தேனியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தேனி: தேனி மாவட்டத்தில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் மணிமண்டபத்திற்குச் சென்று, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து கம்பம் நகரில் உள்ள திமுகவின் மூத்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்குப் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆயிரம் பேருக்கு பொற்கிழியை வழங்கினார். பின்னர் விழா மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தான் தேனி மாவட்டத்திற்கு அமைச்சராக வருகை தந்ததும், மூத்த கழக முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்கியதும் மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய உதயநிதி, "நீங்கள் அனைவரும் பெரியாரோடும், அண்ணாவோடும், கலைஞரோடும் பயணம் செய்தவர்கள். அன்று நான் பிறந்திருக்கக்கூட மாட்டேன். உங்களுக்குப் பொற்கிழி வழங்குவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் வீட்டுப் பிள்ளையாக இன்று உணர்வதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்களுக்குப் பொற்கிழி வழங்குவதற்காக மட்டும் நான் இங்கு வரவில்லை, சேலத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான இளைஞர் அணி மாநாடு, எழுச்சி அளிக்கக் கூடிய மாநாடாக அமைய வேண்டும் என்றால் கழகத்திற்காக உழைத்த மூத்த முன்னோடிகளான உங்களின் வாழ்த்துக்களைப் பெறுவதற்காகவும் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.

கலைஞர் ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்ததற்கும், தற்போது முதலமைச்சராகக் கழகத்தின் தலைவர் இருப்பதற்கும் கட்சியின் மூத்த முன்னோடிகள் நீங்கள் தான் காரணம். மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்ட கலைஞரைப் பார்ப்பதற்குக் கடுமையாகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.

ஆனால் அப்போது கழக முன்னோடிகள் அனைவரும் திருப்பதி மற்றும் திருத்தணி கோவிலுக்குச் செல்கின்றோம் என்று மொட்டை அடித்து கொண்டு பக்தர்களாக சென்று கலைஞரைச் சந்தித்து ஆறுதல் கூறிய மூத்த முன்னோடிகளைக் கழகம் ஒருபோதும் மறவாது" என அமைச்சர் உதயநிதி பேசினார்.

அதன்பின்னர் கம்பம் நகரில் உள்ள பாவலர் படிப்பகம் அருகே அமைக்கப்பட்டுள்ள புதிய நூலகத்தைத் திறந்து வைத்துப் பார்வையிட்டு, நூலகத்தின் வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டார். அதனை அடுத்து பொதுமக்களிடம் நலம் விசாரித்து, பொதுமக்களின் மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.

இதையும் படிங்க: 40 தொகுதிகளில் அதிமுக வென்றால் ஈபிஎஸ் பிரதமராகும் வாய்ப்பு - மாஜி அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி!

ABOUT THE AUTHOR

...view details