தேனி மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதி அல்லாத இடங்களில் பொதுமக்கள் வெளியே வருவதற்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாவட்டத்தில் கரோனா வைரஸ் தாக்குதல் பரவாமல் தடுப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்புடன் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்துவருகிறது.
கட்டுப்பாட்டு பகுதி அல்லாத இடங்களில் பொதுமக்களின் நலன்கருதி தமிழ்நாடு அரசு தடை உத்தரவை தளர்த்தி உள்ளது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கடந்த இரண்டு தினங்களாக அதிக அளவில் கூட்டமாகவும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் சென்று வருவதால் நோய்த்தொற்று பரவும் வாய்ப்பு உள்ளது.
இதனை சீர்செய்திட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தளர்வு அறிவிக்கப்பட்ட போதிலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமை, கூட்டம் கூடுதல் போன்ற காரணங்களால் நோய்த்தொற்று பரவுதலை தடுப்பதற்காக பொதுமக்களின் நலன்கருதி மே 6ஆம் தேதி முதல் ஒரு நபர் மூன்று தினங்களுக்கு ஒரு முறை, குறிப்பாக மூன்று மணி நேரம் மட்டுமே வெளியில் சென்றுவர அனுமதிக்கப்படுவார்கள்.